சரத் பவார் தலைமையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் திடீர் போராட்டம்..! ஆளுநரை சந்திக்க திட்டம்..!

25 January 2021, 5:02 pm
Sharad_Pawar_UpdateNews360
Quick Share

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று மும்பையின் ஆசாத் மைதானத்தில் கூடினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

பல்வேறு மாநிலங்களின் விவசாயிகளைப் போலவே, அவர்களும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஒரு வேளாண் சட்ட எதிர்ப்பாளர், “நாங்கள் இன்று ஆளுநருக்கு ஒரு குறிப்பைக் கொடுப்போம். எங்கள் குடும்பங்களும் எங்களுடன் வந்துள்ளன. ஏனென்றால் நாங்கள் விவசாயத்தை இழந்தால், முழு குடும்பமும் தெருவுக்கு வரும்.” எனக் கூறினார்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “சில கட்சிகள் விவசாயிகளின் ஆதரவில்லாமல் தவறாக வழிநடத்துகின்றன. 2006’ல் என்.சி.பி ஒப்பந்த விவசாயத்தை ஏன் அனுமதித்தது என்று காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன். மாநிலத்தில் ஒப்பந்த வேளாண்மை செய்வது சரி, ஆனால் மத்திய அரசு அதைச் செய்தால் தவறு. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கிடையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும் மும்பையின் பேரணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அருகே போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் விவசாயிகள் அணிவகுப்பு தேவையில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். மேலும் இது விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாகவும் கூறினார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Views: - 0

0

0