அறியாமையால் செய்த தவறு : கஞ்சா செடிகளை அடியோடு அழித்த விவசாயிகள்.. கிராமத்தினருக்கு குவியும் பாராட்டு! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 2:00 pm
Kanja Plant Removed -Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை விவசாயிகளே அழித்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஏராளமானோர் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுகிறது.

இதனை தடுக்க அந்த பகுதியில் சாலையில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கஞ்சா வளர்க்கப்படும் பகுதி ஆந்திரா – தெலுங்கானா இடையேயான மலைப் பகுதி என்பதால் இரண்டு மாநில அரசுகளுக்கும் இது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது .

எனவே கஞ்சா சாகுபடியை தடுத்து நிறுத்த கஞ்சாவால் ஏற்படும் தீமைகள் குறித்து மலையோர கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டம் பலரேவுலா பஞ்சாயத்து நெலகட்டா கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் கஞ்சா சாகுபடி என்ற பேச்சே இருக்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்து தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கஞ்சா தோட்டங்களை அழித்தனர்.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள கிராமத்தினரும் மலைப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் கஞ்சா செடிகளை அழித்து வருகின்றனர். இதுகுறித்து கிராமவாசிகள் கூறியபோது சட்டவிரோதமான செடிகளை வளர்ப்பதை விட நல்ல வருமானம் தரக்கூடிய நேர்மையான விவசாயத்தை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 277

0

0