வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்…!!

29 November 2020, 11:32 am
farmers protest - updatenews360
Quick Share

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றுள்ளனர். இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லிக்கு புறப்பட்டனர். டெல்லி நோக்கி அலையலையாக திரண்டு வந்த விவசாயிகளை அரியானா அரசு தனது மாநில எல்லையில் தடுத்து நிறுத்தியது.

இருப்பினும், போலீசாரின் தடையையும் மீறி அரியானாவில் நுழைந்த பஞ்சாப் விவசாயிகள், பின்னர் அங்கிருந்து டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடர்ந்தனர். பல்வேறு எல்லை பகுதிகள் வழியாக டெல்லிக்குள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை டெல்லி போலீசாரும் அனைத்து எல்லைகளிலும் தடுத்து நிறுத்தினர். சாலைகளில் முள்வேலி, தடுப்புகள் என பல அடுக்கு தடையை ஏற்படுத்தி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனை தொடர்ந்து, புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தை விவசாயிகளுக்கு போராட்டத்துக்காக போலீசார் ஒதுக்கினர். அதன்படி விவசாயிகள் தங்கள் வாகனங்களில் நிரங்காரி மைதானத்துக்கு சென்றனர். அங்கு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு டெல்லியில் உள்ள குருத்வாரா மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போல டெல்லி ஆம் ஆத்மி அரசும் உணவு வழங்கி வருகிறது.

மேலும் கூட்டத்தினரிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரிக்‌ஷா ஒன்றில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அது போராட்டக்காரர்களிடையே சுற்றி சுற்றி வந்து செல்கிறது. இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர்.

இதற்கிடையே டெல்லியின் எல்லை பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நிரங்காரி மைதானத்துக்கு செல்ல மறுத்து வரும் அவர்கள், எல்லை பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்துகொண்டே தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளனர்.

Views: - 0

0

0