“பாகிஸ்தானுக்கு போய் அமல்படுத்திக் கொள்ளுங்கள்”..! ஆர்ட்டிகிள் 370 குறித்து சஞ்சய் ராவத் சரவெடி..!

7 November 2020, 2:34 pm
sanjay_raut_UpdateNews360
Quick Share

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், இந்தியாவில் ஆர்ட்டிகிள் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளுக்கு இடமில்லை என்றும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு செயல்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீட்கப்படும் வரை தான் இறக்க மாட்டேன் என்று பாரூக் அப்துல்லா நேற்று கூறியதை அடுத்து சஞ்சய் ராவத் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே நேற்று உரையாற்றிய அப்துல்லா, “எனது மக்களுக்காக ஏதாவது செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் உரிமைகள் மீட்கப்படும் வரை நான் இறக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

‘ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானில் சேர விரும்பியிருந்தால் அது 1947’ல் நடந்திருக்கும் என்றும் ஷேக் முகமது அப்துல்லா போன்ற ஒரு சிறந்த தலைவர் எழுந்து நின்று மதச்சார்பற்ற இந்தியாவில் சேர்ந்தார் என்றும் அவர் மேலும் கூறினார்.

முந்தைய மாநிலமான ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதற்காக அவர் பாஜகவை கண்டித்தார்.

பாரூக் மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தடுப்புக்காவலில் இருந்து வெளியே வந்த பின்னர் இந்திய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். காஷ்மீரின் கொடி ஏற்றப்படும் வரை இந்தியாவின் தேசியக் கொடியை காஷ்மீரில் ஏற்றி வைக்கப் போவதில்லை என்று மெகபூபா முப்தி சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், ஆர்ட்டிகிள் 370’வது பிரிவு சீனாவின் உதவியுடன் மீட்டெடுக்கப்படும் என்று பாரூக் அப்துல்லா கூறினார்.

இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனாவின் சஞ்சய் ராவத், பாரூக் அப்துல்லா வேண்டுமானால் பாகிஸ்தான் சென்று அங்கு ஆர்ட்டிகிள் 370’ஐ அமல்படுத்திக் கொள்ளட்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு பாகிஸ்தான் அரசு தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கியது குறித்து காஷ்மீர் அரசியல்வாதிகள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அதை சுட்டிக் காட்டும் வகையில்க் சஞ்சய் ராவத்தின் கருத்து உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 17

0

0