ஒரே பாலின திருமணம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!!

26 February 2021, 1:24 pm
delhi high court - updatenews360
Quick Share

புதுடெல்லி: நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப முறையின்படி கணவராக ஆணும், மனைவியாக பெண்ணும் இருக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ள ‘ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது’ என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மேலும் நான்கு பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளனர். இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விசாரணை ஏப்., 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்குகளில் டெல்லி அரசின் சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திருமண சட்டத்தின்படி ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தயாராக உள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் நேற்று பிற்பகலில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், திருமணம் என்பது இரண்டு தனி நபர்களுக்கு இடையே அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது தான். ஆனால், அதை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும் உடல் ரீதியிலான உறவு கொண்டாலும் அதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. நம் நாட்டில் உள்ள நடைமுறைகளின் படியும் பல மதங்களின் தனிநபர் சட்டங்களின்படியும், ஆணாகப் பிறந்தவரை கணவராகவும், பெண்ணாகப் பிறந்தவரை மனைவியாகவும், அவர்களுடைய திருமண உறவில் பிறந்தவர்களை குழந்தைகளாகவும் கருதுகிறோம்.

ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாக அமைந்து விடும். பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டே திருமணச் சட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அவை, மதங்களின் தனிநபர் சட்டங்களின் அடிப்படையில் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. ஒரே பாலினத் திருமணம் என்பதற்கான வாய்ப்பு இல்லை. அதில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரே பாலினத் திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் மிகப் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது.

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 6

0

0