நக்சல் தாக்குதல்…ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைப் பதிவு: அசாம் பெண் எழுத்தாளர் கைது..!!

9 April 2021, 2:59 pm
nasalite - updatenews360
Quick Share

குவாஹாட்டி: சத்தீஸ்கரில் நடந்த நக்சல் தாக்குதலின் போது உயிரிழந்த ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய அசாம் பெண் எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் கடந்த 3ம் தேதி நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், ஒரு பாதுகாப்பு படை வீரரை பிணைக் கைதியாக பிடித்துச் சென்று நேற்று விடுவித்தனர்.

இந்த சூழலில், அசாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிக்கா சர்மா என்பவர் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார்.அதில், ‘சம்பளம் வாங்கும் மக்கள், பணியின் போது உயிரிழந்தால் அவர்களை தியாகிகள் எனக் குறிப்பிடக் கூடாது. அப்படி பார்த்தால், மின்வாரிய ஊழியர்கள் தங்கள் பணியின் போது மின்சாரம் தாக்கி இறக்க நேரிட்டால், அவர்களையும் தியாகிகள் எனக் குறிப்பிடலாமா?’ என கூறியிருந்தார்.

சிக்கா சர்மாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து, எழுத்தாளர் சிக்கா சர்மாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தேச துரோகம், அவதூறு பரப்புதல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Views: - 126

0

0