மோடியை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியீடு..! காங்கிரஸ் எம்எல்ஏ ஜித்து பட்வாரி மீது வழக்குப் பதிவு..!
9 August 2020, 4:05 pmபிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து ட்விட்டரில் வெளியிட்டதற்காக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
பாஜக தலைவர் கௌரவ் ராண்டிவின் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்ரிபுரா காவல் நிலைய ஆய்வாளர் பவன் சிங்கால் தெரிவித்தார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டதற்காக பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜித்து பட்வாரி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். ஐபிசி 464 மற்றும் 181 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று சிங்கால் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக சட்டமன்ற சபாநாயகருடன் பாஜக எம்.எல்.ஏக்கள் பேசி பட்வாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக ராண்டிவ் மேலும் தெரிவித்தார்.
“பிரதமரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பட்வாரி கைது செய்யப்பட வேண்டும். ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்விலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளார். பட்வாரியை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க எங்கள் எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற சபாநாயகருடன் பேசுவார்.” என்று அவர் கூறினார்.