மகாராஷ்டிராவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி:இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Author: kavin kumar
4 December 2021, 10:09 pm
Quick Share

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமிக்ரான் உறுதியானதை அடுத்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஒமிக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.இது 32 முறை உருமாற்றமடைந்து ஒமிக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமிக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள்,

பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஆகிய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆனது. இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரி ஒருவருக்கு இன்று ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. மும்பை அருகே உள்ள கல்யாண்-டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த அந்த நபர், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் இருந்து துபாய், டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். அவர் தடுப்பூசி எதுவும் செலுத்தவில்லை. அவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த 35 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்ட நபருடன் டெல்லி-மும்பை விமானத்தில் பயணித்த 25 பேருக்கும் பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Views: - 327

0

0