புலிகாட் ஏரியில் குவியல் குவியலாக செத்து மடிந்த வெளிநாட்டு பறவைகள் : காரணம் குறித்து விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan6 October 2021, 8:37 pm
ஆந்திரா : தடா அருகே வெளிநாட்டு பறவைகள் மர்ம மரணம் குறித்து ஆந்திர அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடா அருகே உள்ள புலிக்காட் ஏரிக்கு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் வந்து இனவிருத்தி செய்து பின்னர் திரும்பி செல்வது வழக்கம்.
புலிகாட் ஏரிக்கு குளிர்காலத்தில் வரும் பறவைகள் சுற்றுவட்டாரங்களில் உள்ள மற்ற ஏரிகளுக்கும் செல்வது உண்டு. இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் வருகை தற்போது துவங்கியுள்ளது.
நெல்லூர் மாவட்டம் தடா அருகே உள்ள பாரிஜாதா ஏரி சமீபத்தில் இருபத்தி ஒன்பது வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து கிடந்தன.
வெளிநாட்டு பறவைகள் இறந்து கிடப்பது பற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் அடிப்படையில் கால்நடைத்துறையினர், சுற்றுச்சூழல் துறையினர் ஆகியோருடன் அங்கு வந்த வனத்துறையினர் மர்மமான முறையில் இறந்து போன பறவைகளின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
மேலும் பாரிஜாத ஏரி தண்ணீர் மற்றும் ஏரியில் வசிக்கும் மீன்கள் ஆகியவற்றையும் பரிசோதனைக்காக சேகரித்து விஜயவாடாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பாரிஜாத ஏரிக்கு வரும் கால்வாய் தண்ணீரில் தடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் பெருமளவில் கலந்து இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பாரிஜாத ஏறி தண்ணீரில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு அங்கு வசிக்கும் மீன்கள் இறந்து போன நிலையில் அவற்றை சாப்பிட்ட வெளிநாட்டு பறவைகளின் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
0
0