Praise the Lord : கன்னியாஸ்திரி பாலியல் வழக்கிலிருந்து விடுதலையான ஃபிஷப் பிராங்கோ பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 4:46 pm
Quick Share

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கேரள பாதிரியார் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி கற்பழித்து விட்டதாக கடந்த 2018ம் ஆண்டில் புகார் கூறினார். இந்த புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக வந்த மற்ற பல கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோ மூலக்கலைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் அமர்ந்தனர். 2014 மற்றும் 2016 க்கு இடையில் முல்லக்கல் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்பியிடம் 2018 ஜூன் மாதம் புகார் அளித்தார். இதையடுத்து பிஷப் பிராங்கோ முளய்க்கல் 2018 செப்டம்பர் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர், 2018 அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். மேலும் அனுபமா உள்ளிட்ட கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. 2018, 2019-ம் ஆண்டுகளில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 105 நாள் ரகசிய விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்பதற்காக பிஷப் பிராங்கோ முளய்க்கல் பின்வாசல் வழியாக கோர்ட்க்கு வந்தார். பிராங்கோ முளய்க்கலுடன் அவரது சகோதரனும், சகோதரியின் கணவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். தீர்ப்பு கூறுவதைத் தொடர்ந்து கோர்ட் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோபக்குமார், போதிய ஆதாரங்கள் இல்லாததால், பாதிரியார் பிராங்கோ முளய்க்கல் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பானது ஒரே வரியில் “குற்றவாளி குற்றமற்றவர் என அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் ” என்று எழுதப்பட்டுள்ளது. இதனை நீதிபதி ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வாசித்தார். தீர்ப்பு வெளியான பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பிஷப் பிராங்கோ முளய்க்கல் அழுதபடியே தனக்காக வாதாடிய வழக்கறிஞரை கட்டிப்பிடித்தார். அப்போது பிஷப் பிராங்கோ முளய்க்கலிடம் தீர்ப்பு பற்றி கேட்டதற்கு, ” Praise the Lord ” என கையை அடக்கமாக கட்டி நின்றபடி ஒரு வரியில் பதில் அளித்தார் .

Views: - 177

0

0