உ.பி. அரசியலில் அடுத்தடுத்து டுவிஸ்ட்… பாஜகவில் இணைந்தார் முலாயம்சிங்கின் மருமகள் : பிரதமரின் செயல்பாட்டுக்கு பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
19 January 2022, 1:31 pm
Quick Share

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங்கின் மருமகள், திடீரென பாஜகவில் இணைந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்னா யாதவ் இன்று பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வு தேர்தலில் சமாஜ்வாதிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அபர்னா யாதவ், பாஜக மூத்த தலைவர்களின் முன்னிலையில் அக்கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அபர்னா யாதவ், நான் பாஜகவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முதலில் நாடு தான் முக்கியம். பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டேன், எனக் கூறினார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அபர்னா யாதவ் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது.

Views: - 357

0

0