“கோமா நிலைக்கு சென்றார் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி” – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
13 August 2020, 10:12 amகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் கொரோனா தொற்றால் அவரின் உடல்நிலை மோசமானது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த சூழலில் தற்போது அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள், அவரது உறவினர்கள் மத்தியில் சோகம் நிலவியுள்ளது.