மம்தாவுக்கு மற்றொரு ஆப்பு..! பாஜகவில் இணைந்தார் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி..!

6 March 2021, 2:52 pm
dinesh_trivedi_updatenews360
Quick Share

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று முறைப்படி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையிலும், மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் முன்னிலையிலும் அவர் கட்சியில் இணைந்தார்.

திரிவேதியை ஒரு கொள்கை ரீதியான அரசியல்வாதி என்று பாராட்டிய ஜே.பி.நட்டா, முன்பு தவறான கட்சியில் இருந்த சரியான நபர், இப்போது சரியான கட்சியில் இருப்பதாகவும் கூறினார்.

இந்த பொன்னான தருணத்திற்காக தான் காத்திருப்பதாக திரிவேதி கூறினார். சில கட்சிகளில் ஒரு குடும்பமே உயர்ந்ததாக போற்றப்படும் நிலையில், பாஜகவில் அவ்வாறு இல்லை என்று கூறிய திரிவேதி மேலும், தொற்றுநோயை சிறப்பாக கையாண்டதற்காக, அண்டை நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சிறப்பாகக் கையாண்டதற்காகவும் மோடி அரசை பாராட்டினார்.

மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பாஜக தீவிரமான ஆல்-அவுட் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல திரிணாமுல் தலைவர்கள் பாஜகவில் சேர சமீபத்திய மாதங்களில் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

70 வயதான திரிவேதி, ஒரு காலத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது மத்திய அமைச்சரவையில் முக்கியமான ரயில்வே அமைச்சக இலாகாவையும் பெற்றார்.

எனினும் பின்னர் மம்தா- திரிவேதி இடையிலான உறவு மோசமடைந்ததை அடுத்து, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர்கள் இணைந்தனர். 2019’ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவரை கட்சி மாநிலங்களவைக்கு எம்பியாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கட்சிக்குள் மம்தாவின் அண்ணன் மகனின் ஆதிக்கம், பிரஷாந்த் கிஷோரின் கட்டுப்பாட்டில் மம்தா சென்றது போன்ற பல விஷயங்களில் தினேஷ் திரிவேதி உட்பட பல திரிணாமுல் தலைவர்கள் அதிருப்தியடைந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது மம்தாவுக்கு தேர்தலில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கொடுக்கும் எனக் கூறாப்படுகிறது.

Views: - 6

0

0