பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நான்கு நக்சல்கள் பலி..! சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டை தீவிரம்..!

12 August 2020, 3:07 pm
Indian_Army_UpdateNews360
Quick Share

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காலை 9.30 மணியளவில் ஜகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு காட்டில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பல்வேறு பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுக்கள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறினார்.

ஜகர்குண்டாவின் உட்புறப் பகுதிகளில் நக்சல்களின் இருப்பிடம் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாவட்ட ரிசர்வ் காவல் படை (டி.ஆர்.ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) மற்றும் அதன் உயரடுக்கு பிரிவு கோப்ரா பிரிவு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழுக்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

மாநில தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள புலாம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் ரோந்து சென்ற போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து நக்சல் தரப்பிலிருந்து துப்பாக்கிச்சூடு நின்ற பின் நான்கு ஆண் நக்சல்களின் உடல்கள், ஒரு 303 துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.