நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: ராஜஸ்தானில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!!

7 May 2021, 10:54 am
Quick Share

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில் ராஜஸ்தானும் தீவிர பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,532 பேருக்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மொத்த பாதிப்பு 7,02,568 ஆக உயர்ந்து உள்ளது. 16,044 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,99,376 ஆக உயர்ந்து உள்ளது. 161 பேர் ஒரே நாளில் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,182 ஆக உயர்வடைந்து உள்ளது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த உத்தரவின்படி, வருகிற 31ம் தேதிக்கு பின்னரே திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். திருமணங்கள் தொடர்புடைய எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வரும் 31ம் தேதி வரை அனுமதி இல்லை. நீதிமன்ற திருமணங்கள் மற்றும் 11 பேருக்கு குறைவானோர் கலந்து கொள்ள கூடிய வீட்டில் சிறிய அளவில் நடத்தப்படும் திருமணங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும். ஊரக பகுதிகளிலும் பாதிப்பு உறுதியாகி வரும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகள் ஒத்தி வைக்கப்படும்.

மத வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஊரடங்கில் வீட்டிலேயே மதசடங்குகளை நடத்தி கொள்ளும்படி மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாநிலங்களிலும் பரவலை தடுக்க இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் நிலை காணப்படுகிறது.

Views: - 133

0

0