ஜி.சி.முர்முவுக்கு சிஏஜி பதவி..! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது இதற்குத்தான்..?
7 August 2020, 10:06 amஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் பதவியில் இருந்து விலகிய ஒரு நாள் கழித்து, தற்போதைய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) இந்த வாரம் ஓய்வு பெறவிருப்பதால் ஜி.சி.முர்மு இந்தியாவின் புதிய கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் கேடரின் 1978-ஐ.ஏ.எஸ் அதிகாரியான சி.ஏ.ஜி ராஜீவ் மெஹ்ரிஷி ஆகஸ்ட் 8’ஆம் தேதி 65 வயதை எட்டுவதால் அன்றோடு பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். சிஏஜி ஒரு அரசியலமைப்பு பதவி என்பதால், அது காலியாக இருக்க முடியாது. ஜி.சி.முர்முக்கு நவம்பரில் 61 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரின் முதல் லெப்டினன்ட் கவர்னராக முர்மு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் 2019 அக்டோபர் 31 அன்று பதவியை ஏற்றுக்கொண்டார்.
குஜராத் கேடரின் 1985’பேட்ச் இந்திய நிர்வாக சேவை அதிகாரியான முர்மு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி ஆளுநர் சத்ய பால் மாலிக்கிடமிருந்து இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
அதற்கு முன்னர், முர்மு குஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருந்தார்.
முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா, முர்மு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். சின்ஹா பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருக்கும் நெருக்கமானவர் என்று அறியப்படுகிறது.
முன்னதாக மெஹ்ரிஷி 2015’ஆம் ஆண்டில் இந்திய உள்துறை செயலாளராக இருந்தார். மேலும் 25 செப்டம்பர் 2017 அன்று சிஏஜியாக பொறுப்பேற்றார்.
இந்திய அரசியலமைப்பின் 370 மற்றும் 35’ஏ பிரிவுகளை இந்திய அரசு ரத்து செய்ததில் இருந்து இந்தியா ஒரு வருடம் நிறைவடைந்த ஒரு நாளில் முர்முவின் ராஜினாமா வந்த போதே அவருக்கு சிஏஜி பதவி வழங்க உள்ளதால் தான் ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக முர்மு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.