சட்ட விரோத ஆயுத விற்பனைக் கும்பல்..! சுற்றி வளைத்து வேட்டையாடிய உத்தரபிரதேச போலீசார்..!
10 August 2020, 3:54 pmவிகாஸ் துபே விவகாரத்தை அடுத்து, உத்தரபிரதேசத்தில் மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானியின் மேற்பார்வையில் காசியாபாத் போலீசார், தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தாதாக்களின் கொட்டத்தை அடக்கி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக காசியாபாத் காவல்துறை, சட்டவிரோத ஆயுத விற்பனை மோசடியைக் கண்டறிந்துள்ளது.
சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்கிய 2 நபர்களான உமர்தீன் மற்றும் கயூர் ஆகியோரையும் காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில் கைத்துப்பாக்கிகள் மற்றும் இதர துப்பாக்கிகளும் இருந்தன.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அணிக்கு ரூ 20,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, மற்றொரு நடவடிக்கையில், காசியாபாத் போலீசார் ஒரே இரவில் சட்டத்தை மீறியதற்காக பல வாகனங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் குற்றவாளிகளையும் பிடித்தனர்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, உத்தரபிரதேசத்தில் பெருகிய ரௌடிகள் மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், விகாஸ் துபே விவகாரத்திற்கு பிறகு இது வேகமெடுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, ராகேஷ் பாண்டே எனும் தாதாவை உத்தரபிரதேச போலீசார் என்கவுண்டர் செய்த நிலையில், தாதாக்களுக்கு சட்டவிரோத ஆயுதங்களை வழங்கும் நபர்களை தற்போது வேட்டையாடியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.