திருப்பதி மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை : நொடியில் தப்பித்த வாகன ஓட்டிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2021, 1:39 pm
tirupati Landslide - Updatenews360
Quick Share

திருப்பதி : திருப்பதி மலைப்பாதை சாலையில் வெடிப்பு, பெருமளவில் மண்சரிவு, பாறைகள், மரங்கள் சரிந்து விழுந்த காரணத்தால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்வதற்கான இரண்டாவது மலைப்பாதையில் போக்குவரத்து தடை.

தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே பாறை சரிவுகள் ஏற்பட்டன. எனவே ஒரே ஒருநாள் திருப்பதி திருமலை இடையே வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்த தேவஸ்தானம் தற்காலிகமாக சரி செய்து மீண்டும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.

ஆனால் மலை பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் எந்த நேரத்திலும் மீண்டும் சரிவுகள் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று காலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் இரண்டாவது மலைப்பாதையில் ஓரிடத்தில் திடீரென்று 5 டன் பாறை விழுந்ததில் பெரும்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த இடத்தில் இருந்த மரங்கள், மண் ஆகியவையும் சாலையில் சரிந்து விழுந்தன. இது தவிர மேலும் ஒரு இடத்தில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டு சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு சாலை எப்போது வேண்டுமென்றாலும் பள்ளத்தில் சரிந்து விடலாம் என்ற அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி மலைப்பாதையில் அவசரகால பயன்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு சாலை வழியாக வாகன போக்குவரத்தை தொடர்வது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி திருமலை இடையே வாகனங்களில் பயணிக்கும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Views: - 322

0

0