அரசு பேருந்து ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம்: திருப்பதியில் தவிக்கும் தமிழக பக்தர்கள்…!!

26 February 2021, 9:14 am
tirupati2 - updatenews360
Quick Share

திருப்பதி: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நடத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுபெற்றவுடன் உடனடியாக அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், பணிக்கு வராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாமி தரிசனம் முடித்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக திருப்பதி பேருந்து நிலையம் வந்த பக்தர்களுக்கு தமிழக பேருந்துகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்த பேருந்துகளில் தொலைதூரம் செல்லும் பயணிகளை மட்டுமே ஏற்றப்படும் என்று நடத்துநர்கள் தெரிவித்ததால் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட திருப்பதியில் இருந்து 100 முதல் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு பொது மக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஒருபுறம் அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் திருப்பதி வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து தமிழக பக்தர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

Views: - 6

0

0