கொரோனா சிகிச்சைக்காக 2 லட்ச ரூபாய்க்கு அதிகமான தொகையை ரொக்க பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி..!

8 May 2021, 12:18 pm
Corona_Hospital_UpdateNews360
Quick Share

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களுக்கு ரூ 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக ஏற்றுக்கொள்ள மத்திய வருமான வரித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருமான வரித்துறைக்கான கொள்கையை உருவாக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையை வழங்கும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ இல்லங்கள், கொரோனா பராமரிப்பு மையங்கள் அல்லது இதே போன்ற பிற மருத்துவ வசதிகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269எஸ்டி’இன் நோக்கத்திற்காக தளர்த்தப்பட்டுள்ளன.” என்று அது கூறியுள்ளது.

முன்னதாக, ஒரு நபர் அதிகபட்சமாக ரூ 2 லட்சத்திற்கு குறைவான தொகையை மட்டுமே ரொக்கமாக பரிவர்த்தனை செய்யலாம் என்றும் ரூ 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்கத்தைப் பரிவர்த்தனை செய்வதை பிரிவு 269எஸ்டி தடை செய்கிறது.

கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது 2017’ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக இந்த விதி தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

“மருத்துவமனைகள் அல்லது கொரோனா பராமரிப்பு மையங்களால் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை நோயாளியின் பான் அல்லது ஆதார் மற்றும் பணம் செலுத்துபவர் மற்றும் நோயாளிக்கும் பணம் செலுத்துபவருக்கும் இடையிலான உறவை பதிவு செய்வதன் மூலம் ரொக்கமாக ரூ 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வசூலிக்கலாம்.” என வருமான வரித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 152

0

0