இனி வெளிநாட்டு நிதி பெற இது கட்டாயம்..! என்ஜிஓக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு..!

12 November 2020, 8:04 pm
Rupee_Dollar_UpdateNews360
Quick Share

வெளிநாட்டு நிதியுதவியைப் பெற விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடுமையான விதிகளை பின்பற்றினால் மட்டுமே சாத்தியம் எனும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற என்ஜிஓ அமைப்புகள் குறைந்தது மூன்று ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். மேலும் வெளிநாட்டிலிருந்து பணம் பெற தகுதியுடையவர்களாக இருக்க குறைந்தது ரூ 15 லட்சம் தன்னார்வ நடவடிக்கைகளில் செலவிட்டிருக்க வேண்டும். இந்த விதிகளை நிறைவேற்றினால் மட்டுமே வெளிநாட்டு நன்கொடைகளை இனி ஏற்க முடியும்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், வெளியுறவு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலர்கள், நன்கொடையாளரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட உறுதிப்பாட்டு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இது வெளிநாட்டு பங்களிப்பின் அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட வேண்டும் என்பதைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலக பொறுப்பாளர்களின் ஆதார் எண்களை வழங்குவது இதில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலுவலக செலவுகள் அத்தகைய தொகையில் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் வெளிநாட்டு நிதியை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளின்படி, எந்தவொரு என்.ஜி.ஓ அல்லது வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு முன் அனுமதி பெற விண்ணப்பிக்கும் நபருக்கு எஃப்.சி.ஆர்.ஏ கணக்கு இருக்க வேண்டும்.

2016-17 முதல் 2018-19 வரை எஃப்.சி.ஆர்.ஏ’இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ரூ 58,000 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி பெறப்பட்டது. நாட்டில் சுமார் 22,400 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 32

0

0