தடுப்பூசி போட்டாச்சா..? இனி பொதுவெளியில் மாஸ்க் அணிய வேண்டியதில்லை..! அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு..!

14 May 2021, 8:31 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கைக்கு அமெரிக்கா வேகமாகத் திரும்புகிறது என்பதற்கான மிகப் பெரிய அறிகுறியாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் இனி முககவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூறியுள்ளது.

இந்த பரிந்துரை வீட்டிற்குள் மட்டுமல்லாது பொதுவெளியிலும் பொருந்தும் என்று சி.டி.சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் முககவசம் அணியாமல் செய்தியாளர்கள் முன் ஆஜரானார்கள்.

“இது ஒரு சிறந்த மைல்கல் என்று நான் நினைக்கிறேன், ஒரு சிறந்த நாள். பல அமெரிக்கர்களுக்கு இவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுவதில் நாம் பெற்ற அசாதாரண வெற்றிகளால் இது சாத்தியமானது” என்று பிடென் கூறினார்.

சமீபத்திய சி.டி.சி வழிகாட்டுதல்களைப் பற்றி குறிப்பிடுகையில், முழு தடுப்பூசி போடப்பட்ட மக்கள் மிகக் குறைவான கொரோனா அபாயத்தில் உள்ளனர் என்று பிடென் கூறினார். “எனவே, நீங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால், நீங்கள் இனி முககவசம் அணியத் தேவையில்லை. ஆனால் நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், அல்லது நீங்கள் இரண்டு ஷாட் தடுப்பூசிகளில் ஒன்றை மட்டுமே பெற்றிருந்தால், நீங்கள் இன்னும் முககவசம் அணிய வேண்டும்.” என்று ஜனாதிபதி கூறினார்.

114 நாட்களில் 250 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். “நாங்கள் முடிவுகளைப் பார்க்கிறோம். 50 மாநிலங்களில் 49 மாநிலங்களில் பாதிப்புகள் குறைந்துவிட்டன. 2020 ஏப்ரல் முதல், ஒரு வருடத்திற்கு முன்னர், தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இப்போது மிகக் குறைவானவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மரணங்கள் 80 சதவிகிதம் குறைந்து, 2020 ஏப்ரல் முதல் மிகக் குறைந்த மட்டத்தில் தற்போது உள்ளது.” என்று பிடென் கூறினார். இந்த வைரஸ் மற்ற நாடுகளில் வேகமாக பரவுகிறது என்று அவர் கூறினார்.

சி.டி.சி தனது சமீபத்திய வழிகாட்டுதல்களில், முழு தடுப்பூசி போடப்பட்டவர்கள்,கூட்டாட்சி, மாநில, உள்ளூர், பழங்குடி அல்லது பிராந்திய சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சில இடங்களைத் தவிர, பொதுவெளியில் முககவசம் அணியாமல் அல்லது சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் பயணம் செய்பவர்கள் பயணத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது பயணத்திற்குப் பிறகு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் கொரோனா நோயைத் தடுப்பதில் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சி.டி.சி தெரிவித்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ள ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா, மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் (ஜே & ஜே) தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும்.

உலக சுகாதார அமைப்பால் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளுக்கும் இது பொருந்தும் என்று சி.டி.சி. தெரிவித்துள்ளது.

Views: - 147

0

0