செல்ஃபி மோகத்தால் சோகம்..! தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த வாலிபர்..!

8 November 2020, 4:48 pm
Gun_with_Bullet_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், 22 வயதான இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது தற்செயலாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால், தன் மார்பில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இறந்த இளைஞர் தாரம்புரா கிராமத்தில் வசிக்கும் சவுரப் மாவி என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரும் அவரது நண்பரான நகுல் சர்மா என்பவரும், நண்பரின் திருமணத்திற்காக மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் உள்ள செக்டர் பை -3’க்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சவுரப் மாவி வழியில் ஒரு துப்பாக்கியை எடுத்து ஒரு படத்திற்கு போஸ் கொடுக்கத் தொடங்கினார் என்று போலீசார் தெரிவித்தனர். அவர், தவறுதலாக, துப்பாக்கியின் விசையை இழுத்து, தன்னை மார்பில் சுட்டுக் கொண்டார். 

நகுல் சர்மா உடனடியாக அவரை ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“பலத்த காயங்கள் மற்றும் இரத்த போக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர் இறந்தார். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது” என்று ஷார்தா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த சவுரப் மாவியின் நண்பரான நகுல் சர்மாவை பிஸ்ராக் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி, தடயவியல் துறையின் அதிகாரிகள் குழு ஆதாரங்களை சேகரித்து வருவதாகக் கூறினார்.

Views: - 24

0

0