விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்ல புதிய ஏற்பாடு: கர்நாடகத்தில் பசுமை பேருந்து சேவை விரைவில் தொடக்கம்..!!

18 July 2021, 11:11 am
Quick Share

பெங்களூரு: விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக கர்நாடகத்தில் விரைவில் பசுமை பேருந்து சேவை தொடங்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பல தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது. அதுபோல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கொரோனா ஊரடங்கு பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப்பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இந்தியன் ரெயில்வே கிஷான் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வேளாண் விளைபொருட்களை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பசுமை பஸ் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கூறியதாவது, கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்ய போக்குவரத்து வசதி இல்லாததால் அவதிப்பட்டனர்.

மேலும் கொரோனா ஊரடங்கால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் பல்வேறு புதுமைகளை போக்குவரத்து கழகத்தில் புகுத்து வருகிறோம். அதன்படி விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், போக்குவரத்துக்கு கழகத்திற்கு வருவாய் கிடைக்கும் நோக்கிலும் பசுமை பஸ்சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் தாங்கள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகளை சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும், விற்பனைக்கு கொண்டு செல்லவும் முடியும். கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் 10 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து சேவையை வழங்கி வருகிறது. மொத்தம் 8,738 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 565 பேருந்துகள் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன பழைய பேருந்துகள். இந்த பேருந்துகளை புதுப்பித்து பசுமை பேருந்து சேவைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பெங்களூருவில் 11 பேருந்துகளும், துமகூருவில் 57 பேருந்துகளும், கோலாரில் 18 பேருந்துகளும், சிக்கபள்ளாப்பூரில் 32 பேருந்துகளும், மைசூரு மைசூரு மாநகரில் 188 பேருந்துகளும், மைசூரு புறநகரில் 76 பேருந்துகளும், மண்டியாவில் 36 பேருந்துகளும், ஹாசனில் 312 பேருந்துகளும், மங்களூருவில் 44 பேருந்துகளும், புத்தூரில் 20 பேருந்துகளும், தாவணகெரேவில் 2 பஸ்களும், சிவமொக்காவில் 13 பஸ்களும், சித்ரதுர்காவில் 4 பஸ்களும் உள்ளன.

விவசாயிகளின் விளை பொருட்களை கொண்டு செல்ல ஏற்கனவே ரெயில்வே கிஷான் ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபோல் நாங்களும் பசுமை பஸ்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த பஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 117

0

0