தொழில்நுட்ப கோளாறு காரணமாக GSLV F-10/ EOS-03 திட்டம் தோல்வி | முழு விவரம் இங்கே

Author: Hemalatha Ramkumar
12 August 2021, 8:52 am
GSLV-F10 mission could not be accomplished due to performance anomaly
Quick Share

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட GSLV F-10 ராக்கெட் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியைக் கண்காணிப்பதற்காக 2,268 கிலோ எடையுள்ள EOS03 செயற்கைக்கோளை வடிவமைத்து இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிட பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் GSLV F-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2 வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி ஏவப்பட்டது.

ராக்கெட் வானில் பறந்தபோது விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ராக்கெட் திட்டமிட்ட இலக்கை அடைய முடியவில்லை. EOS 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட முடியாமல் போனது.

செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார். கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று GSLV F-10 திட்டம் தோல்வியடைந்தது என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் 5 ஆம் தேதியே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த EOS 03 செயற்கைக்கோள், தொழில்நுட்ப சிக்கல்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு இன்று விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்தது. இந்நாள் வரையில் ஏவப்பட்ட 14 GSLV ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 352

0

0