நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி விபத்து..! 13 பேர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்..!

19 January 2021, 11:31 am
15_Labourers_Die_Accident_Surat_UpdateNews360
Quick Share

குஜராத்தின் சூரத்தில் ஒரு லாரி மேலே ஏறியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் கோசம்பா நகரில் நடந்துள்ளது. கிம் சார் ரஸ்தாவில் உள்ள ஒரு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேரின் மேல் இந்த லாரி ஏறியதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பின்னர் இருவர் இறந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் ராஜஸ்தானின் பன்ஸ்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“கரும்பு ஏற்றப்பட்ட டிராக்டரில் ஒரு லாரி மோதியது, அதன் பின்னர் லாரியின் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டிருந்த நடைபாதைக்கு மேல் அதை ஓட்டிச் சென்றார்” என்று சூரத் கம்ரேஜ் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சி.எம்.ஜடேஜா தெரிவித்தார்.

உயர்மட்ட தலைவர்கள் இரங்கல் :

பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில் நடந்த உயிர் இழப்பு சோகமானது என்றார். “என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறினார்.

சூரத்தில் நடந்த விபத்து காரணமாக உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும்  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

இதே போல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த சம்பவம் குறித்து தாம் மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறினார்.

குஜராத்தில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் :

2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் 2019’ஆம் ஆண்டு சாலை விபத்துகள் அறிக்கையின்படி, 2019’இல் ஒவ்வொரு வாரமும் குஜராத் சாலைகளில் நடக்கும் விபத்துக்களால் சராசரியாக இரண்டு குடிமக்கள் இறந்து போகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

விபத்துகளின் எண்ணிக்கையில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குஜராத் 10”வது இடத்தில் உள்ளது. 2018 உடன் ஒப்பிடும்போது 2019’இல் இறப்பு 7.6 சதவீதம் குறைந்துள்ளது.

2018 உடன் ஒப்பிடும்போது இறப்பு மற்றும் சாலை விபத்துக்களைக் குறைப்பதில் குஜராத் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இறப்புகளைக் குறைக்க உதவியதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2019’ல் குழிகள் காரணமாக குஜராத்தில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு சாலை போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.

குஜராத்தில் அபாயகரமான சாலை விபத்துக்கள் 2016 முதல் 2019’ஆம் ஆண்டு வரை 9.2 சதவீதம் குறைந்துள்ளன. அதே நேரத்தில் விபத்து தீவிரம் அல்லது இறப்பு 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 2015 நவம்பரில் கையெழுத்திட்ட பிரேசிலியா பிரகடனத்தின் ஒரு பகுதியாக 2020’ஆம் ஆண்டளவில் சாலை விபத்து இறப்பு விகிதங்களை 50 சதவீதமாகக் குறைக்க இந்தியா முன்னர் உறுதியளித்த நிலையில், சாலை விபத்து இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான இந்தியாவின் இலக்கு 2030’க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0