ஹத்ராஸ் சோகம்..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டப்பட்டவரால் சுட்டுக்கொலை..!

2 March 2021, 1:45 pm
Quick Share

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றவர் கௌரவ் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அவர் 2018’ல் குறுகிய காலம் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கௌரவ் மீது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை வழக்குப் பதிவு செய்திருந்தார்.

எனினும் கௌரவ் சர்மா கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்துவிட்டார்.

பெண் மற்றும் கௌரவ் குடும்பங்கள் தற்போதும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருப்பதாக ஹத்ராஸ் காவல்துறைத் தலைவர் வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

“பிரதான குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியும் அத்தையும் ஒரு கிராம கோவிலுக்கு இந்த பாதிக்கப்பட்டவர் இருந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய சென்றிருந்தனர். அப்போது பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கௌரவ் மற்றும் பெண்ணின் தந்தை தலையிட்டனர். இதற்குப் பிறகு, கௌரவ் ஆத்திரத்தில் சில இளைஞர்களை கூட்டிவந்து மிரட்டியதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.” என ஜெய்ஸ்வால் கூறினார்.

50 வயதான அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: - 8

0

0