மற்றொரு ஹாத்ராஸ் சம்பவம்..! தலித் இளம் பெண் போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம்..! குலுங்கும் உ.பி.

1 October 2020, 10:47 am
rape_case_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் விவகாரம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு 22 வயது தலித் பெண் பால்ராம்பூர் மாவட்டத்தில் இதே போல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பலியான பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பால்ராம்பூர் மாவட்டத்தின் கெய்சாரி பகுதியில் 22 வயதான தலித் பெண் பால்ராம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து சரியான நேரத்தில் வீடு திரும்பத் தவறியதால், அவரது பெற்றோர்கள் அவரைத் தேடி அழைந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் கெய்ன்ஸ்டி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாக எஸ்பி வர்மா கூறினார்.

எழுத்துப்பூர்வ புகாரில், பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டதாக குடும்பத்தினர் கூறினர். ஆனால், அவர் தனது மொபைல் போனில் வந்த அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இது குடும்ப உறுப்பினர்களிடையே பீதியைத் தூண்டியது.

இதையடுத்து அந்த பெண் இரவு 7 மணியளவில் ஒரு ஆட்டோரிக்ஷாவில் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் தான் அவருக்கு நேர்ந்த கோரச் சம்பவம் தெரிய வந்துள்ளது. 
வேலை முடித்து வந்த தலித் பெண்ணை கடத்தி அவருக்கு போதை ஊசி போடப்பட்டு அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

அப்போது நடந்த துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவரின் இடுப்பு மற்றும் இரண்டு கால்களும் உடைந்தன. பின்னர் அவர் ஒரு ரிக்‌ஷாவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான இளம் பெண் மோசமான நிலையில் இருந்ததால், அவளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியில் இறந்துவிட்டார். “நிறைய வலி இருக்கிறது, நான் பிழைக்க மாட்டேன்” என்று மருத்துவமனை செல்லும் வழியில் மகள் கதறியதாக தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் மருத்துவமனையில் இருந்து போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ​​பெற்றோர்கள் தங்கள் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதாக எஸ்.பி. வர்மா தெரிவித்தார்.

எழுத்துப்பூர்வ புகாரில் குடும்பம் இரண்டு சிறுவர்களை பெயரிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பெற்றோரின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஷாஹித் மற்றும் சாஹில் என போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர் என்று எஸ்.பி. வர்மா மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கை கும்பல் பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஹாத்ராஸுக்குப் பிறகு, இப்போது ஒரு மகள் பால்ராம்பூரில் துன்புறுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இறந்தார். இரங்கல்! \குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்யுங்கள்.” என அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.