மனைவியுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மத்திய சுகாதார அமைச்சர்..!

2 March 2021, 3:38 pm
Harshvarthan_Health_Minister_UpdateNews360
Quick Share

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது மனைவி நூதன் ஆகியோர் இன்று டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். 

டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் இன்ஸ்டிடியூட்டில் சுகாதார அமைச்சர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். முன்னதாக, சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், “மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன், அவரது மனைவி நூதன் ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் மருந்தை எடுத்துக்கொள்வார்கள். இடம் : டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் நிறுவனம் : காலை 11 மணி. நாள் : மார்ச் 2, 2021 (செவ்வாய்).” எனக் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக நேற்று, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தீவிர உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து நேற்று காலையிலேயே பிரதமர் நரேந்திர மோடியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு இந்தியாவின் இரண்டாம் கட்ட தடுப்பூசியைத் தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) காலை 6.30 மணியளவில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கிய கோவாக்சின் முதல் டோஸ் மோடிக்கு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் பின்னர் முறையிட்டார்.

இதற்கிடையில், 60 வயதுக்கு மேற்பட்ட 1,28,630 பயனாளிகள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 18,850 பேர் நோயுற்றவர்களுடன் நேற்று முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர் என்று மத்திய சுகாதார அமைச்சின் தற்காலிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் 1.47 கோடியைத் தாண்டியது.

சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் ஜனவரி 16’ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பிப்ரவரி 2 முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0