மூன்று நாளாக காஷ்மீரில் இடைவிடாத மழை..! ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தேக்கம்..!

Author: Sekar
24 March 2021, 2:38 pm
Jammu_Kashmir_Highway_UpdateNews360
Quick Share

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகலுக்குள் வானிலை மேம்படும் என்று கணித்துள்ள நிலையிலும், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 10’க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவால் சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்தன. மண்சரிவுகளை அகற்றி நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு வழி செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நிலைமை மீட்டெடுக்கப்படும் வரை ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இருபுறமும் எந்தவொரு வாகன இயக்கமும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மண்சரிவை அகற்ற தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

காஷ்மீரை ஜம்முவுடன் இணைப்பதற்கான மாற்று வழித்தடமான முகலாய சாலை கடும் பனிப்பொழிவால் டிசம்பரில் போக்குவரத்துக்காக மூடப்பட்டது.

அங்கு பனியை நீக்கும் நடவடிக்கை முடிந்ததும் ஏப்ரல் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியனை ஜம்முவில் உள்ள ராஜோரியுடன் இணைக்கிறது.

ஸ்ரீநகரில் உள்ள ஐஎம்டி அதிகாரிகள், காஷ்மீரின் மேல்பகுதிகளில் புதிய பனிப்பொழிவு காணப்படுவதாகக் கூறினார். இன்று காஷ்மீரில் வானிலை மேம்படும் என வானிலை அதிகாரிகள் கூறியிருந்தாலும், இன்று மாலை வரை மிதமான அளவில் மழைப்பொழிவு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Views: - 77

0

0