கரையை நெருங்கும் டானா புயல்.. ஒடிசாக்கு முக்கிய எச்சரிக்கை!
Author: Hariharasudhan24 அக்டோபர் 2024, 11:28 காலை
மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளில் நிலவும் டானா புயல் நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, நேற்றைய முன்தினம் (அக்.22) அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்று (அக்.23) காலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புயல் ஒடிசாவின் தாமரா துறைமுகம், பிதர்கனிகா சரணாலயம் மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாளை (அக்.25) அதிகாலையில் டானா புயல் கரையைக் கடக்கும் போது, அதனை ஒட்டிய தீவுப் பகுதிகளிலும், பைதரினி மற்றும் பிராமினி ஆகிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கரையை கடக்கலாம் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பல தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. அங்கு மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினர் ஆகியோரும் களத்தில் உள்ளனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!
இதனிடையே, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹுக்ளி, ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை மறுநாள் (அக்.26) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசா மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக அம்மாநில அரசுத் தரப்பில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இதுவரை 200 ரயில்கள் ரத்து செய்தும், சுற்றுலாத் தலங்களையும் ஒடிசா அரசு மூட உத்தரவிட்டுள்ளது.
0
0