தெலங்கானாவில் கனமழையால் வீடு இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்த சோகம்….!!

14 October 2020, 9:25 am
flood - updatenews360
Quick Share

ஐதராபாத்: தெலங்கானாவில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஐதராபாத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் முகமதியா ஹூல்ஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி 2 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும், மீட்கப்பட்ட பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் ஐதராபாத் எம்.பி. அசாரூதின் ஓவைசி பார்வையிட்டார். மேலும், மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 42

0

0