ஹைதராபாத்தை மீண்டும் புரட்டி போட்ட கனமழை : ஒரே இரவில் 30 செ.மீ மழை பதிவு!!

18 October 2020, 1:31 pm
Hyderabad Rain- Updatenews360
Quick Share

தெலுங்கானா : நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்தததால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐதராபாத்தில் பெய்த கனமழை ஆகியவற்றின் காரணமாக தெலங்கானா மாநில தலைநகரம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளத்தால் சூழப்பட்டது.

ஏராளமான அளவில் வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து அவை சேதம் அடைந்து விட்டன. கனமழை காரணமாக சாலைகளில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றை மழை வெள்ளம் இழுத்துச் சென்ற சம்பவங்களும் ஏராளமான அளவில் நடைபெற்றன.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தை வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் அவற்றில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்கு தீர்வு காண வீடுகளை விட்டு வெளியில் வர இயலாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் கடந்த மூன்று நாட்களாக ஹைதராபாத் மாநகரம் முழுவதுமாக முடங்கிக் கிடக்கிறது.

மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேபிள்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு நகரின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது வரை மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் நான்கு நாட்களாக இருட்டில் வசிக்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் சற்று ஓய்வெடுத்து வந்த கனமழை நேற்று இரவு முதல் மீண்டும் பெய்யத்துவங்கியது.

நேற்று இரவு மட்டும் 30 சென்டி மீட்டருக்கும் அதிக அளவில் கனமழை ஹைதராபாத்தில் பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்க துவங்கியுள்ளன.