விவசாயிகளை ஏமாற்றிய வியாபாரியின் வீடு ஏலம்: புதிய வேளாண் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை…!!

26 December 2020, 3:01 pm
new farm laaw - updatenews360
Quick Share

மத்திய பிரதேசம்: விவசாயிகளிடம் வேளாண் பொருட்களை விலைக்கு வாங்கிவிட்டு ஏமாற்றிய வியாபாரியின் வீடு வேளாண் சட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் புதிய வேளாண் சட்டங்கள் அமல் செய்யப்பட்டன. மத்திய பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சந்தை நடைமுறைகளில் மாநில அரசு சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு வட்ட அளவிலும் தலா 2 விவசாய சங்கங்களுக்கு குளிர்ப்பதன கிட்டங்கி வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் மத்திய பிரேதசத்தின்பெரும்பாலான விவசாய சங்கங்கள் பங்கேற்கவில்லை.

மத்தியபிரதேசத்தில் மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது புதிய வேளாண் சட்டங்களின்படி விவசாயிகள் துணிச்சலாக புகார் அளித்து நிவாரணம் பெற்று வருகின்றனர். அந்த வகையில், குவாலியர் மாவட்டம், பிதாவர் வட்டம், பாஜ்னா கிராமத்தை சேர்ந்த வியாபாரி பல்ராம் சிங், அப்பகுதியை சேர்ந்த 42 விவசாயிகளிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான வேளாண் விளைபொருட்களை வாங்கியுள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான பணத்தை அவர் முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அந்த வியாபாரி மீது 23 விவசாயிகள் புகார் அளித்தனர். இதற்கிடையில், வியாபாரி குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புதிய வேளாண் சட்ட விதிகளின்படி வியாபாரியின் வீடு ஏலம் விட்டப்பட்டது.

இதன் மூலம், ரூ.1.45 லட்சம் கிடைத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் வியாபாரி பல்ராம் சிங்கின் நிலத்தையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர் மீது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0