வெள்ளத்தில் தத்தளிக்கும் ஐதராபாத் நகரம் : சாலையில் நீச்சல் அடித்த இளைஞர்!!

Author: Udayachandran
14 October 2020, 12:26 pm
hyderabad Rain- Updatenews360
Quick Share

தெலுங்கானா : வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையை கடந்ததை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஹைதராபாத் மகா நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.

புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. மழையின் அளவு மற்ற இடங்களைவிட ஹைதராபாதில் அதிகமாகவே காணப்பட்டது. இதன் காரணமாக நகரில் உள்ள உசேன் சாகர் ஏரி மற்றும் ஹைதராபாத் நகரை சுற்றி இருக்கும் ஏரிகள், குளங்கள் ஆகியவை நிறைந்து வழிகின்றன.

ஹைதராபாத் நகரில் உள்ள சுரங்க நடைபாதைகள், ரயில்வே மேம்பாலங்கள், ரயில் பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் ஆகிவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டு தத்தளிக்கின்றன.
இதுதவிர தெலுங்கானாவில் உள்ள பல்வேறு அணைகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளளவிற்கும் அதிகமாக தண்ணீர் இருப்பு ஏற்பட்டுள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் முக்கிய அணைகளான நாகார்ஜுன சாகர், மன்னேரு, ஸ்ரீராம் சார் ஆகிய அணைகளில் இருந்து நேற்று இரவு மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

ஹைதராபாத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஹைதராபாத்-வரங்கள், ஹைதராபாத்-விஜயவாடா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு சாலைகளை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் கனமழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணியை முடுக்கி விட்டுள்ள தெலுங்கானா மாநில அரசு, அதிகாரிகள் முழு விழிப்புடன் இருந்து நிலைமையை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Views: - 77

0

0