தெலுங்கானாவில் ஆணவக் கொலை..! சாதி மாறி திருமணம் செய்ததால் விபரீதம்..!

25 September 2020, 6:45 pm
Death_UpdateNews360
Quick Share

தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயதான ஹேமந்த் மற்றும் 23 வயதான அவந்தி ரெட்டி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவந்தி ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். ஹேமந்த்குமார் வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் அவர்கள் ஜூன் 11, 2020 அன்று குத்புல்லாபூர் துணை பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

அவந்தியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. இதையடுத்து தம்பதியினர் திருமணமான பின்னர் சந்தா நகர் போலீஸை அணுகி பாதுகாப்பு கேட்டனர். பின்னர் தம்பதியினர் பெற்றோரிடமிருந்து விலகி கச்சிபவுலி பகுதியில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு அவந்தி ரெட்டி தனது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். நேற்று அவரது தாய்மாமன் குடும்பத்தினர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் கச்சிபவுலியில் உள்ள அவந்தியின் இல்லத்திற்கு வந்து தம்பதியரை காரில் சந்தானகர் பகுதி நோக்கி கடத்திச் சென்றனர்.

இதற்கிடையில் ஹேமந்த்குமார் காரிலிருந்து தப்பினார். அவந்தியின் தாய் மாமா யுகேந்தர் ரெட்டி இரண்டு பேருடன் அவரை துரத்தினார். அவர்கள் ஹேமந்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக காரில் உட்கார வைத்து அவரை சங்க ரெட்டி மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே யுகேந்தர் ரெட்டி மற்றும் இரண்டு பேர் ஹேமந்த்தை கொலை செய்தனர்.

ஹேமந்தின் உடல் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோத்தகுடெமில் வீசப்பட்டது. 

இதற்கிடையே விசயம் அறிந்த காவல்துறை அவந்தியின் தந்தை லக்ஷ்மா ரெட்டி, தாய் அர்ச்சனா மற்றும் அவரது தாய்மாமன் யுகேந்தர் ரெட்டி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஹேமந்தின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.  ஹேமந்தின் தாயார், ‘என் மகன் காரில் இருந்து தப்பிக்க முயன்றான். ஆனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடித்து காரில் உட்கார வைத்தார்கள். அவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறினர்.

பின்னர் நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எல்லோரும் ஹேமந்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொன்னார்கள். அவரை எச்சரித்த பின்னர் அவர்கள் அவரை அனுப்புவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

சாதி மாற்றி திருமணம் செய்ததால் நடந்த இந்த ஆணவக்கொலை தெலுங்கானாவை உலுக்கியுள்ளது.

Views: - 4

0

0