“மகாராஷ்டிரா தனிமைப்படுத்தியது என்னை அல்ல..”..! சுஷாந்த் சிங் வழக்கு குறித்து பீகார் ஐபிஎஸ் “நச்” பதில்..!

7 August 2020, 9:32 pm
Bihar_IPS_Vinay_Diwari_Sushant_Singh_UpdateNews360
Quick Share

பீகார் ஐ.பி.எஸ் அதிகாரி வினய் திவாரி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் விசாரணைக்காக மும்பைக்கு வந்து மும்பை மாநகராட்சியால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென பாட்னாவுக்கு புறப்பட்டார். 

இந்நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், “நான் தனிமைப்படுத்தப்படவில்லை என்று தான் நான் கூறுவேன். உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டது இந்த வழக்கின் விசாரணை தான். பீகார் காவல்துறையின் விசாரணை தான் தடைபட்டது.” என்று திவாரி கூறினார். இதற்கிடையில், அறிக்கை பதிவு ஒத்திவைப்பதற்கான தனது கோரிக்கையை ஏற்க மறுத்ததால் ரியா சக்ரவர்த்தி அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜரானார்.

ஆகஸ்ட் 5’ம் தேதி மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு இறுதியாக ஏற்றுக்கொண்டது.

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங்கின் புகாரின் பேரில் பீகார் காவல்துறை தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் நேற்று, ரியா சக்ரவர்த்தி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 3 பேருக்கு எதிராக குற்றவியல் சதி மற்றும் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சிபிஐ மீண்டும் வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக தனது அறிக்கையின் பதிவு உச்சநீதிமன்ற விசாரணை வரை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று நடிகை ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கோரியிருந்தார்.

ஆனால் மேல்முறையீட்டை அமலாக்க இயக்குனரகம் நிராகரித்தது. ரியாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் எச்சரிந்திருந்தது. இதையடுத்து அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு மனோஜ் சஷிதர் கீழ் சிபிஐயின் சிறப்பு விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாமுவேல் மிராண்டாவை அமலாக்க இயக்குனரகம் நேற்று ஒன்பது மணி நேரம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0