நேற்று அரெஸ்ட்….இன்றைக்கு ரிலீஸ்: ஐஐடி மாணவி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் மாணவர் ஜாமீனில் விடுதலை..!!

Author: Rajesh
29 March 2022, 4:59 pm
Quick Share

கொல்கத்தா: ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதான முன்னாள் மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி 2017 முதல் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை படித்து வருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி தனது துறைப் பேராசிரியரிடம் புகாரளிக்க, சாதியரீதியாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்தி இந்தப் பிரச்னையை அவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய மகளிர் ஆணையத்திடமும், தமிழக காவல்துறையிடமும் அந்த மாணவி புகார் அனுப்பினார்.

இதையடுத்து, அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, ஓராண்டுக்கு பின்னர் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக, ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஷூக் தேவ் சர்மாவை (30), கொல்கத்தாவில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டைமண்ட் ஹார்பர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்குவரத்து வாரண்ட் பெற்ற பின் அவரை சென்னை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கிங்ஷூக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Views: - 625

0

0