வரி ஏய்ப்பில் சிக்கும் பிபிசி நிறுவனம்… 4 நாட்கள் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் : வருமான வரித்துறை தகவல்…!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 8:01 pm
Quick Share

பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை குறித்து சோதனை பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தின் போது குஜராத்தின் முதலமைச்சராக, தற்போதைய பிரதமர் மோடி இருந்தார். இந்த நிலையில், தற்போது குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது.

இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியே, குஜராத் கலவரத்திற்கு பொறுப்பு என்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இதனால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 14ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தியது. தொடர்ச்சியாக 3 நாட்கள் நடந்த இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் இந்த நிறுவனம் பல மொழிகளில் செய்திகளை ஒளிபரப்புவதாகவும், அதற்கான வருமானத்தை கணக்குகளில் காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பட்டுள்ள தொகைகளுக்கு கணக்கு காட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ள வருமான வரித்துறை, பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாகவும், டிவி, ரேடியோ, டிஜிட்டல் என பல்வேறு மொழிகளில் அளிக்கப்படும் சேவையில் வருவாய் கணக்கிடுவதில் விதிமீறல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Views: - 355

0

0