சியோமி மற்றும் பைடு நிறுவனத்துக்கு ஆப்பு..! மத்திய அரசின் அடுத்த அடி..! எம்ஐ பிரௌசர், பைடு தேடல் செயலிகளுக்கு தடை..!

5 August 2020, 5:42 pm
Apps_UpdateNews360
Quick Share

கால்வான் பள்ளத்தாக்கில் எல்லை மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை தடை செய்யும் இந்திய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது, சியோமி கார்ப் மற்றும் பைடு இன்க் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னதாக பைட் டான்ஸின் வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக், அலிபாபாவின் யுசி பிரௌசர் மற்றும் சியோமியின் எம்ஐ கம்யூனிட்டி செயலி உள்ளிட்ட பல செயலிகளை நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தியதற்காக கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா தடைசெய்தது.

ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளின் குளோன்கள் அல்லது வேறுபட்ட பதிப்புகளைக் கொண்ட சுமார் 47 செயலிகளுக்கு சமீபத்திய வாரங்களில் மற்றொரு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைசெய்யப்பட்ட குளோன்களில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைவ் லைட் மற்றும் விஎஃப்ஒ லைட் ஆகியவை அடங்கும்.

ஜூன் மாத நடவடிக்கை போலல்லாமல், அரசாங்கம் தனது சமீபத்திய முடிவை பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் சியோமியின் எம்ஐ பிரௌசர் புரோ மற்றும் பைடூவின் தேடல் செயலிகள் உட்பட சில புதிய செயலிகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அந்த வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. எத்தனை புதிய செயலிகளை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் புதுடில்லியில் உள்ள சீன தூதரகமும் இது குறித்து கருத்து கோரியதற்கு பதிலளிக்கவில்லை. ஆனால் முன்பு செயலிகளை தடை செய்த இந்தியாவின் முடிவை சீனா விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்தியாவில் சியோமியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த தடை குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நிறுவனமான பைடு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பெரும்பாலான சியோமி ஸ்மார்ட்போன்களில் போனுடனேயே வரும் எம்ஐ பிரௌசர் மீதான தடை மூலம், சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்கும் புதிய சாதனங்களில் எம்ஐ பிரௌசர் செயலியை நிறுவுவதை நிறுத்த வேண்டும்.

90 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் விற்பனையாளராக சியோமி உள்ளதாக ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் கவுண்டர் பாயிண்ட் தெரிவித்துள்ளது.

20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து, நாட்டின் இணைய சேவை சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தடைகள் உள்ளன.

மேலும் நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் சீன நிறுவனங்களுக்கான ஒப்புதல் செயல்முறைகளை இந்தியா மேலும் கடுமையானதாக ஆக்கியுள்ளதுடன், அரசாங்க டெண்டர்களில் பங்கேற்க விரும்பும் சீன நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் கடுமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0