19 லட்சம் பேரை கடந்து கொரோனா நோயாளிகள்…! இந்தியாவில் உயரும் பாதிப்பு
5 August 2020, 1:05 pmடெல்லி: யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை தந்துள்ளது.
200 நாடுகளில் வலம் வரும் கொரோனா இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா என்ற அறிவிப்பு இருக்க, படிப்படியாக யாரும் எதிர்பாராத வண்ணம் கொரோனா வேகம் எடுத்துள்ளது.
5 லட்சம், 10 லட்சம் என்று கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயர்ந்து இப்போது 19 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை தந்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறையின் தகவலின் படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துவிட்டது.
52509 பேர் 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் 857 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை என்பது 19,08,255 ஆக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்த உயிரிழப்பு என்று கணக்கிட்டால் 39,795 ஆக இருக்கிறது. இன்னமும் 5,86,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலும், மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர். பாதிப்புகள், பலிகள் அதிகம் இருந்தாலும் 12,82,216 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.