இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா..! நேற்று ஒரே நாளில் 1,26,315 பேருக்கு பாதிப்பு..!

8 April 2021, 12:43 pm
Corona_UpdateNews360
Quick Share

இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 1,26,315 கொரோனா பாதிப்புகள் புதிதாக ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி மிகப் பெரிய எழுச்சியைக் கண்டது. 

இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகள் 1,29,28,574 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 685 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,66,892 ஆக உள்ளது.

நேற்று பதிவான புதிய கொரோனா தொற்றுகளில், மகாராஷ்டிரா மட்டும் புதிதாக 59,907 கொரோனா பாதிப்புகளை பதிவுசெய்தது. சத்தீஸ்கரின் எண்ணிக்கை முதல் முறையாக 10,000’ஐத் தாண்டியது. டெல்லியும் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் பாதிப்புகளாக 5,506 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 9,00,000’ஐத் தாண்டி இப்போது 9,10,319 ஆக உயர்ந்துள்ளது. 1,18,51,393 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது சிகிசசையில் உள்ள நோயாளிகளின் அடிப்படையில் இந்தியா இப்போது 4’வது மோசமான நாடாக உள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் 59,258 பேர் நோயிலிருந்து வெளியேற்றப்பட்டனர் அல்லது மீட்கப்பட்டனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிக்கையின் படி, கொரோனா நோய்த்தொற்றுக்கு 12,37,781 மாதிரிகள் நேற்று ஒரு நாளில் பரிசோதிக்கப்பட்டன. இதன் மூலம், நாட்டில் பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 25,26,77,379’ஐ எட்டின.

நாட்டில் இதுவரை 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 11 முதல் இந்தியாவில் இருந்து அதன் குடிமக்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

இந்தத் தடை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 28 வரை அமலில் இருக்கும் என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0

Leave a Reply