சராசரியை விட 25% அதிகம்..! கொட்டித் தீர்த்த மழை..! 1976’க்குப் பிறகு புதிய உச்சத்தைத் தொட்ட மழைப்பொழிவு..!
29 August 2020, 1:27 pm1976’ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆகஸ்டில் தான் இந்தியாவில் மிக அதிக மழை பெய்தது. ஜூலை மாதத்தில் சராசரியை விட 10 சதவீதம் குறைவான மழை நிலையில், ஆகஸ்ட் மாதம் சராசரியை விட 25 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
இதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்தது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. இருப்பினும், செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
“இந்த ஆண்டுக்கான பருவமழை தொடர்பாக இதுவரை கணிக்கப்பட்டவை சரியானவை. நாடு முழுவதும் பருவமழை சீராகவும் பெய்து வருகிறது. ஆகஸ்டில் பலத்த மழை பெய்தது. ஆனால் செப்டம்பரில் பருவமழை படிப்படியாக பலவீனமடையக்கூடும். இருப்பினும், குறைந்த மழை பெய்த பகுதிகளில் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.” என்று ஐஎம்டி இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா கூறினார்.
சமீபத்திய ஐஎம்டி அறிக்கையில், “ஆகஸ்ட் 1-28 முதல், இந்தியாவில் 296.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் மாதத்தில் சராசரி மழை 237.2 மில்லிமீட்டர் ஆகும். ஆகவே, ஆகஸ்ட் மாதத்தில் சராசரியை விட 25 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
முன்னதாக 1976’ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாதத்தில் சராசரியை விட 28.4 சதவீதம் அதிக மழை பெய்தது. ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழை 1901 மற்றும் 2020’க்கு இடைப்பட்ட காலத்தில் கணக்கிடும்போது 1926’ஆம் ஆண்டில் சராசரியை விட 33 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.
ஐஎம்டி தரவுகளின்படி, ஆகஸ்டில் மத்திய இந்தியாவில் சராசரியை விட 57 சதவீதம் அதிகமாகவும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் சராசரியை விட 18 சதவீதம் குறைவாகவும் மழைப் பொழிவு இருந்துள்ளது.
தற்போது பருவமழை வடமேற்கு இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும், வரும் வாரங்களில் தென் மாநிலங்கள் கனமழையால் எதிர்கொண்டுள்ள சேதங்களில் சிறிது நிவாரணம் பெறக்கூடும் என்றும் மகாபத்ரா கூறினார்.
“செப்டம்பர் மாதத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த மழைப்பொழிவு இருக்கும். ஆனால் நாடு முழுவதும் மழைப்பொழிவு கரிஃப் பருவ பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும். அக்டோபருக்கான கணிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.” என அவர் மேலும் கூறினார்.
0
0