ஆசியக் கண்டத்தில் அசைக்க முடியாத இடத்தில் இந்தியா..! சீனாவை முடக்க அதிரடி வியூகம்..!

26 October 2020, 4:42 pm
Modi_Trump_UpdateNews360
Quick Share

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, இந்தியாவுடனான 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான உரையாடலின் மூன்றாவது பதிப்பிற்காக இன்று இந்தியா வருகிறார்கள். 

2+2 உரையாடல் நாளை நடைபெற உள்ள நிலையில், பேச்சுவார்த்தையின் போது, ​​இந்திய தரப்பை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

2 + 2 உரையாடல் : எகிறும் எதிர்பார்ப்புகள்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் அதன் ஆக்கிரோஷமான நடத்தை உள்ளிட்ட முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பல 2+2 கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் உயர்த்துவதற்காக இரு தரப்பினரும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பேக்கா எனும் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையில் உயர்தர இராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்களைப் பகிர்வதற்கு பேக்கா ஒப்பந்தம் உதவும்.

அமைச்சர்கள் மட்டத்திலான உரையாடல் பரஸ்பர நலன்களின் இருதரப்பு பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ளும். கூடுதலாக, இரு தரப்பினரும் முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.

பாம்பியோ மற்றும் எஸ்பர் ஆகியோர் தங்கள் இந்திய சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்கள். மேலும் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எஸ்பருக்கு ரைசினா ஹில்ஸில் உள்ள சவுத் பிளாக் புல்வெளிகளில் முத்தரப்பு சேவை மரியாதை வழங்கப்பட உள்ளது.

முந்தைய 2 + 2 உரையாடல்கள்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரால் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர், 2+2 உரையாடலின் முதல் பதிப்பு 2018 செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்றது. உரையாடலின் இரண்டாவது பதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனில் நடந்தது. 

இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வளர்க்க அமைச்சர் உரையாடலின் புதிய கட்டமைப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் பிடியை தளர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியாவை சீனாவுக்கு மாற்று சக்தியாக பார்க்கிறது.

இதனால் இந்திய-அமெரிக்க உறவு மிக நெருக்கமாகியுள்ள நிலையில், தென்சீனக் கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒரு புதிய கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

எனவே நாளைய 2+2 உரையாடல் முழுக்க முழுக்க சீனாவை மையப்படுத்தியே இருக்கும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 17

0

0