ஆயுதங்களைக் கண்டறியும் “ஸ்வாதி” ரேடார்கள் வாங்க முடிவு..? மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் ராணுவம்..!

12 August 2020, 2:18 pm
Swathi_Weapons_Locating_Radar_UpdateNews360
Quick Share

பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய மேலும் ஆறு ஆயுதங்களைக் கண்டறியும் ஸ்வாதி ரேடார்களை இந்திய ராணுவத்திற்காக வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

400 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆயுதங்களைக் கண்டறியும் ஆறு ஸ்வாதி ரேடார்கள் கையகப்படுத்துவதற்கான அனுமதி இன்று நடைபெறவிருக்கும் பாதுகாப்பு அமைச்சகக் கூட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஆர்டிஓ’வால் தயாரிக்கப்பட்டு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் உற்பத்தி செய்யும் இந்த, ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் ரேடார்கள் ஒரு வெளிநாட்டிற்கும் வழங்கப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுதம் கண்டுபிடிக்கும் ரேடாரான ஸ்வாதி, 50 கிலோமீட்டர் வரம்பில் மோட்டார், குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் போன்ற எதிரி ஆயுதங்களின் இருப்பிடத்தை வேகமாக, தானியங்கி முறையில் துல்லியமாக வழங்கும். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆயுதங்களிலிருந்து வீசப்பட்ட வாய்ப்புள்ள சூழல் குறித்து ஒரே நேரத்தில், இந்த ரேடார் கண்டறியும் திறன் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளுக்கு ரேடார்களைப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு 2018’ஆம் ஆண்டில் முதன்முறையாக இராணுவத்திற்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களில் இந்திய இராணுவம் உள்நாட்டுமயமாக்களுக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்து வருகிறது. மேலும் இந்திய விற்பனையாளர்களுக்கு சுயமாக இயக்கப்படும் பீரங்கித் துப்பாக்கிகள் போன்ற பல உபகரணங்களுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.