இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மறைவு: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

13 July 2021, 5:45 pm
Quick Share

புதுடெல்லி: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கு உதவிய யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யாஷ்பால் சர்மா பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தார். 70, 80களில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த இவர், 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

modi - updatenews360

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 66 வயதாகும் அவர், 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இரு அரைசதங்கள் அடித்தார்.

அந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாஷ்பால் சர்மா 89 ரன்கள் குவித்தார். மேலும், அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 40 பந்துகளில் 40 ரன்களும், அரையிறுதியில் 115 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து முக்கியப் பங்களித்தார். ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம், பஞ்சாப் மற்றும் அரியானா கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு தலைசிறந்த வீரர் மறைந்தது வேதனை ஏற்படுத்தி உள்ளது.

amitshah_updatenews360

கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேர்த்த இந்தியாவின் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றவர். நடுவராகவும், தேசிய அணி தேர்வு குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் அவரது பங்கு மறக்க முடியாதது என்றும் அனுராக் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி பிரதமர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய கிரிக்கெட் அணியால் அதிகம் விரும்பப்பட்டவர். அணியின் சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்.

அவரது மறைவு வருத்தம் தருகிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என்னுடைய இரங்கல்கள். ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அவரது திகைப்பூட்டும் விளையாட்டு எப்போதும் நம்முடைய நினைவில் ஒரு பகுதியாக இருக்கும். அவருடைய மறைவு கிரிக்கெட் உலகிற்கு மிக பெரிய இழப்பு என கூறியுள்ளார்.

Views: - 152

0

0