பாகிஸ்தான் பகுதிக்குள் 200 மீட்டர் ஊடுருவிய இந்திய ராணுவம்..! பரபர பின்னணி..!

1 December 2020, 6:11 pm
LoC_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் சம்பாவில் ஒரு சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் சுமார் 200 மீட்டர் தூரம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவலுக்கு நான்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 150 மீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதை நவம்பர் 22’ஆம் தேதி சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பி.எஸ்.எஃப் வீரர்களால் கண்டறியப்பட்டது. இந்த நான்கு தீவிரவாதிகளும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோட்டா அருகே சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

காஷ்மீருக்குச் சென்று கொண்டிருந்த நான்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்கள் பயணித்த லாரி நெடுஞ்சாலையில் உள்ள பான் டோல் பிளாசாவில் சோதனை செய்வதற்காக நிறுத்தப்பட்டது. 

11 ஏ.கே. தாக்குதல் துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள், 29 கையெறி குண்டுகள் மற்றும் ஆறு யுபிஜிஎல் கையெறி குண்டுகள் உட்பட ஒரு பெரிய ஆயுத குவியல் மற்றும் வெடிமருந்துகள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வசம் இருந்து மீட்கப்பட்டன. அவர்கள் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு பெரிய திட்டத்தோடு காஷ்மீருக்குள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

“இதையடுத்து பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு பாகிஸ்தானுக்குள் சென்றனர். இது சுரங்கப்பாதையின் தொடக்க புள்ளியாக இருந்தது. இது கடந்த வாரம் இந்தியப் படைகளால் அகற்றப்பட்ட பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டது” என்று ஒரு உயர் அதிகாரி கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் சம்பாவில் உள்ள எல்லைப்பகுதியில் பி.எஸ்.எஃப் கண்டுபிடித்த இரண்டாவது சுரங்கப்பாதை இதுவாகும். ஆகஸ்டில், காலர் பகுதியில் எல்லை வேலி அருகே ஒரு சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0