புத்தகயாவில் அமைகிறது நாட்டின் மிகப்பெரிய புத்தர் சிலை! எத்தனை அடி தெரியுமா?

1 February 2021, 10:38 am
Quick Share

புத்தகயாவில் உள்ள கோவில் ஒன்றில், நாட்டிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்று 100 அடியில் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது. இதற்காக சிலை வடிவமைக்கும் பணி, கோல்கட்டாவில் நடந்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவின், பாராநகர் பகுதியில், கோஷ்பாரா என்ற இடத்தில் உள்ள ஒரு கிரவுண்ட் ஒன்றில் புத்தர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மின்ட்டு பால் என்ற சிலை வடிவமைக்கும் கலைஞர், பைபர்கிளாசில் இதனை உருவாக்கி வருகிறார். புத்தர் கையைத் தலைக்குக் கொடுத்தவாறு படுத்திருக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பிஹார் மாநிலம் புத்தகயாவில் உள்ள ஒரு கோவிலில், அடுத்த ஆண்டு புத்த பூர்ணிமா நாளில், இந்த சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை தயாரிப்பதற்கான செலவை, புத்தா இன்டர்நேஷனல் வெல்பேர் மிஷன் என்ற அமைப்பு ஏற்றுள்ளது. இது தான் இந்தியாவில் அமையப்போகும் மிகப்பெரிய புத்தர் சிலை என, அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிலையை உருவாக்கி வரும் சிற்ப கலைஞர் மின்ட்டு பால் கூறியது: சிலையை செதுக்கும் பணி சீராக நடந்து வருகிறது. ஒவ்வொரு பாகமாக இதனை செய்து வருகிறோம். சிலையை முழுமையாக வடிக்க சில மாதங்கள் ஆகும். பிறகு இது புத்தகயாவில் உள்ள ஒரு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு செதுக்கப்பட்ட பல்வேறு பாகங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோல்கட்டாவிலுள்ள தேப்பிரியா பூங்காவில் உள்ள 80 அடி உயர் துர்கா சிலையை மின்ட்டு பால் தான் செதுக்கியிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலை தான், உலகின் மிகப் பெரிய துர்கா சிலையாகும்.

Views: - 0

0

0