கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் போலி புகார்..! போலீஸ் விசாரணையில் உண்மை அம்பலம்..!
21 January 2021, 5:57 pmமத்திய பிரதேசத்தில், இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொண்ட இந்தூர் போலீசார், இது போலியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு என கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சம்பந்தப்பட்ட இளம் பெண் தன்னை இரண்டு ஆண்கள் கடத்திச் சென்றதாகவும், அவர்களும் மற்ற மூன்று பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். பின்னர், அவர்கள் இளம் பெண்ணைக் குத்தி, ஒரு சணல் பையில் வைத்து, ஒரு ரயில் பாதையில் வீசி விட்டு சென்றுள்ளதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
புகாரைத் தொடர்ந்து பர்தேஷிபுரா போலீசார் கடத்தல், கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், உடனடியாக களமிறங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இது சம்பந்தப்பட்ட இளம் பெண்ணால் போலியாக ஜோடிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
இந்தூரின் ஐஜி ஹரிநாராயண் சாரி மிஸ்ரா, “சிறுமிக்கு எதிராக 182/211 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். போலீசாரின் விசாரணையில் இந்த கூற்றுக்கள் தவறானவை என்று தெரியவந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.
“150’க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி.யின் காட்சிகள் பரிசோதிக்கப்பட்டன. பர்தேஷிபுராவிலிருந்து பங்கங்கா வரையிலான ரயில் பாதைகளில் விஞ்ஞான சான்றுகள் விசாரணையின் போது சேகரிக்கப்பட்டன. புகார் தெரிவித்த இளம் பெண்ணின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் முரணானவை என்று போலீசார் கண்டறிந்தனர்.” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எனினும், அந்த இளம் பெண் எதற்காக போலி புகார் தாக்கல் செய்தார் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
0
0