டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்…!!

30 January 2021, 4:26 pm
Quick Share

புதுடெல்லி: டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி வரை விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ஆனால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை, போராட்டத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று சாலைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்தப் பகுதியைக் காலி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் போராடும் விவசாயிகளுக்கும், சிங்கு எல்லை கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பில் மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த போலீஸார் இருதரப்பினரும் சமாதானம் செய்து விலக்கிவிட முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கட்டுப்படவில்லை என்பதால், போலீஸார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இருப்பினும் அந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் டெல்லி எல்லையில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த மோதலை தொடர்ந்து வன்முறை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி இணைய சேவை முடக்கம் 31ம் தேதி நள்ளிரவு 11 மணிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0